Saturday, January 10, 2009

சாதி இருந்துவிட்டுப் போகட்டுமே!

சாதி இருந்துவிட்டுப் போகட்டுமே!

சாதியைப் பற்றி டோண்டு அவர்களும், வால் பையனும் எழுதியிருந்ததைப் படித்தேன், எனது கருத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

மனிதன் எப்போதுமே (ஆதிகாலம் தொட்டே)ஒரு குழுவாக வாழ்ந்தே பழகியவன், அந்தக் குழுவிற்குள்ளேயே திருமணம் செய்துகொண்டு வாழ்ந்தவர்கள், மற்ற குழுவிற்கும் இதே, பழக்க வழக்கங்கள் குழுவிற்குக் குழு மாறுபடும் ஒரு குழுவிலிருந்து மற்றொரு குழுவிற்குச் சென்று அவர்கள் பழக்க வழக்கங்கள் பிடிபடாமல் உறவுகள் முகம் கோணாமல் பார்த்துக் கொள்ள மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும் எனவே அந்த அந்த இனத்துக்குள் கொள்வினை, கொடுப்பினை நடத்துவது வாழ்க்கைக்கு சுலபம்.

இப்போது குழு,இனம் என்பனவற்றுக்குப் பதில் சாதி இருக்கிறது, ஒருவர் பழக்க வழக்கங்கள் மற்றவருக்கு பிடிபட்டது - சாதி விட்டு சாதி (கலப்பு மணம் என்பதை ஒரு முறை MR ராதா அவர்கள் - மனுசனை மனுசன் கல்யாணம் செய்யறதை எப்படிடா கலப்பு மணம்னு சொல்றீங்க!, மனுசன் மாட்டை கல்யாணம் செஞ்சா அது கலப்பு மணம் - அப்படின்னார்) மணம் புரிந்தவர்கள் அவர்கள் உறவுகளுக்குள் ஏற்பட்ட சிரமம் நான் அறிவேன். சாதியால் இந்த இடர்பாடு நீங்குகிறது.
வால்பையன் அவர்கள் "சாதி வன்முறைகளையும்,கலவரத்தையும் மட்டுமே கொடுக்கும்" என்று சொன்னார்.
சாதி மட்டுமா? மாநிலம், மொழி, நாடு என்ற எத்தனை மனிதனைப் பிரிக்கிறது?
ஏன் அவற்றை எல்லாம் பெருமிதமாகக் கொள்ளும் நாம், சாதியை மட்டும் சங்கடமாக உணர்கிறோம். நமக்கு அடிப்படையில் (பள்ளி, கல்லூரிகளில்) கற்பித்தவற்றை வைத்துத்தானே? நான் என் நாட்டை நேசிக்க வேண்டும், தாய் மொழியை நேசிக்க வேண்டும் என்றால் என் சாதியை நேசிப்பது என்ன தவறு? உங்களுக்கு உங்கள் தேசம் உயர்ந்தது என்றால் பாகிஸ்தானியர்களுக்கு அவர்கள் தேசம், உங்களுக்கு உங்கள் மொழி உயர்ந்தது என்றால் கன்னடம் பேசுபவர்களுக்கு அவர்கள் மொழி - இதனால் எத்தனை போர், வன்முறை (சாதியால் இறந்தவர்களை விட மேற்சொன்னவற்றால் இறந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை எத்தனை!)

எனவே மொழி ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று, தேசம் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று என சொல்லவேண்டியதுதானா? இல்லை! ஒரு குழுவாக இருப்பதில் உள்ள லாபம் இதிலும் நமக்கு வேண்டும்.

மொழி ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று அல்ல மொழி வெறி ஒழிக்கப்பட வேண்டும், தேசம் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று அல்ல எனது தேசம்தான் சிறந்த்தது- மற்ற நாடுகள் எல்லாம் எனக்குக் கீழே என்ற எண்ணம் ஒழிக்கப்பட வேண்டும்

அதே போல சாதியும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று அல்ல சாதிவெறி ஒழிக்கப்பட வேண்டும்,எனது சாதியே உசத்தி, மற்ற எல்லாம் தாழ்த்தி என்ற எண்ணம் ஒழிக்கப்படவேண்டும்.

எனவே
சாதி இருந்துவிட்டுப் போகட்டுமே! (அதன்பாட்டுக்கு!)